சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதிகரித்து வரும் நிதி இழப்புகளால் ஏர் இந்தியா நிறுவனம் தனது செயல்பாட்டு செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான சூழல்களால் ஏர் இந்தியா நிறுவனம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில் மட்டும் நிறுவனம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் (சுமார் ரூ.22,000 கோடி) இழப்பைச் சந்தித்துள்ளது.சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சில நாடுகளின் வான்வெளித் தடைகள் காரணமாக, விமானங்கள் மாற்றுப் பாதைகளில் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் எரிபொருள் வீணாவதுடன், நிறுவனத்தின் இயக்கச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியம் நிர்வாக இயக்குநருமான டெவோல்டே கெப்ரேமரியம் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை உறுதிசெய்ய அனைத்துப் பிரிவுகளிலும் வீண் செலவுகளை தவிர்க்கவும்.
நிறுவனத்தின் நிதி ஒப்புதல் நடைமுறைகள் மறுஆய்வு செய்யப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். குறைந்த செலவில் வேலைகளை வழிமுறையை ஆராய பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு களமிறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில், சிக்கன நடவடிக்கைகளை ஊழியர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்க ஆக்கப்பூர்வமான யோசனைகளை வழங்கும் ஊழியர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் புதிய விருதுத் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.